// பிள்ளை//
பிள்ளைகளில்லாத சவக்களை படிந்த பெரியதொருவீட்டில் நெடுநாள் நண்பனின் மனைவியின்கையால் ஆரஞ்சு பானம் அருந்தித் திரும்பினேன். ஏக்கமும் நிராசையுமான முகமுள்ள தேவதையின் நிசப்த அழுகையை சுமந்தபடி. மருத்துவங்களும் நம்பிக்கைகளும் கற்பிதங்களும் கடவுளரும் கைவிட்ட ஆனந்த் என்ற பெயருள்ள உற்சாகப் பிறவியைச் சூடிக்கொண்ட சுடர்க்கொடி அவள். வீட்டுப் பாடம் எழுதிய என் பிள்ளைக்குக் கேட்காத குரலில் நண்பனின் ஆற்றாமையை பிள்ளையில்லாப் பெருந்துயரைக் கதைத்துக்கொண்டிருந்தேன் மென்குரலில் மனைவியிடம். அடுத்தமுறையென் வீட்டுக்கு ஆனந்த் வந்தபோது ஆழ்ந்த சிந்தனையுடன் என்னை தனித்தழைத்துப் போனான் என் மகன். காதருகில் வந்து ரகசியமாய் மென்குரலில் கேட்டான். அப்பா...ஆனந்த் அங்கிளை நான் அப்பான்னு கூப்பிடட்டுமா.? *****