சிறுகதை : ரூஹானி
"ரூஹ்"என்பதற்கு அரபிமொழியில்
உயிர் என்று பொருள். ரூஹூ ரூஹூ என்று கூவுகிற பறவை யொன்றை மலையாள தேசத்து இஸ்லாமிய மக்கள் ரூஹானிக்கிளி என்றழைப்பார்கள்.கிளி என்றால் நமக்குக் கிளி மட்டுமே. அவர்களின் சொற்களில் நம் கிளி அவர்களின் தத்தம்மா அல்லது தத்தா. தத்தை யென்பதே தூயதமிழ்ச்சொல் தான்.மலையாளதேசத்தினர்அவர்களின் பேச்சுவழக்கில் கிளிகளென்பது பறவைகள் என்றே பொருள்தரும். ரூஹானிப் பறவைகளை ரூஹானிக் கிளிகள் என்றழைக்கிற அவர்களிடம் ஏராளமான நம்பிக்கைகளிருந்தன.
ஏகப்பட்ட கதைகளிருந்தன. ஆழமான இறைநம்பிக்கையின் பின்னணியுள்ள நாட்டுப்புறப்பாடல்களிருந்தன.
ரூஹானிப்பறவைகள் சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டவையென்றும் மரணத்தைக் கொண்டு வருகிற தூதுவனின் அடிமைகளெனவும் மனிதர்களிடத்தே மரணத்தை
அறிவிக்கிற பறவைகளெனவும் வாய் வழிக் கதைகளிருக்கின்றன.
இந்த ரூஹானிப் பறவைகளின் குரலின் வருகையை, முதலில் காதுற்றவர்கள் சட்டெனப் பிரார்த்தனையைத் தொடங்கி விடுவார்கள். அக்கரையில் நிகழ்கிற மரணத்தை இக்கரையில் அறிவிக்க வந்திருக்கிறதென்று தமக்குள்
முணுமுணுத்துக் கொள்வார்கள்.
ரூஹானிகளின் தனித்த
பிரத்யேகமான குரலொன்றை அதன் இனிமையை அக்குரலின்
மென்மையை ரூஹூ ரூஹு வென்ற கூவலைப் பெரும்பாலான
காதுகள் கேட்டுக் கொண்டுதான்
இருக்கின்றன.ஆனால் இந்த ரூஹானிப் பறவையொன்றைப் பார்த்ததாக அதன் நிறம் வடிவம் பருமன் அறிந்தவர்கள் யாருமேயில்லை. தனது வருகையை, ஒருமரணத்தின் வருகையை, ஒரு அழுகையை,ஒரு உயிரின் விடுதலையை அறிவிப்பதற்காக வந்து போகும் பறவை யொன்றைப் பற்றிய கதைகளையும்
குரலையும் தவிர்த்து வேறெந்தச் சான்றுகளுமில்லை.
தூரதேசத்திலிருக்கும் உறவினரை, அடுத்த தெருவில் வாழும் நொய்மை மிகுந்த முதியவரை, உயிர்வாதையில் கிடக்கும் நண்பரை, குடும்பத்தின் மூதுயிரை, என மரணவாய்ப்புள்ள எவரையெல்லாமோ நினைவுக்குள் இழுத்து வந்துவிடுகிறது இந்தக்
குரல்.கடந்துபோன மரணங்களின் வாசனைகள் வலிகள் கண்ணீர்த் துளிகளையெல்லாம் மரண அறிவிப்பின் குரலாயிருக்கிற ரூஹானிக்கிளிகள் சட்டென உள்ளிழுத்துக் கலைத்துப் போட்டு விடுகின்றன.யாருடைய வீட்டுத் தொடியிலாவது, மரக்கூட்டங்களுக் குள்ளிருந்தாவது புறப்படுகிற இந்த ரூஹூ ரூஹூவென்கிற ஒற்றைக் குரல் அந்த மொஹல்லாவையே லேசாய் உள்ளுக்குள் நடுங்கச் செய்து விடுகிறது.
நினைவுதெரிந்த நாள்முதலாய்
இவற்றின் குரல் ஒருபோதும் பொய் சொன்னதேயில்லை. கற்பிதம் என்று தள்ளிவிட முடியாத பேருண்மைகளில் ஒன்று இந்த ரூஹானிப்பறவையின் குரல்.
வாளிக்காரிஎன்றழைக்கப்படுகிற
பாத்துமா தாதாவின்(தாதா..அக்கா) வீடு தான் இங்கிருக்கும் பெரிய தறவாடு. இரண்டு காதுகளிலில் அணிந்திருக்கும் வாளிகள் மட்டும் முப்பத்தஞ்சு பவுன். ஆறு மகன்கள். அத்தனை பேரும் அரபு தேசத்தில். நான்கில் மூன்று மகள்களும் குடும்பமும் கல்ப்நாடுகளில்தான். கடைசி மகள் மட்டும் மலேசியாவில் குடும்பத்துடன்.
பெரிய மாங்காமுச்சிகளடர்ந்த,அடைக்கா மரங்களும், தேக்கும், பலாவும், செறிந்த தென்னையும்பெருங்கிணறொன்றில் கையெட்டும் ஆழத்தில் தண்ணீருள்ள கிணறுமுள்ள தொடியும் ,பெரியவீடும் வீடு நிறைந்த மனிதர்களும், தொழுகை யும் தானமுமாய்ப் பிரகாசிக்கிற வீட்டின் தலைப் பேத்திக்கு மறுநாள் திருமணம்.
முதல்நாள் மைலாஞ்சிச் சடங்கு .அந்த நாளின் அதிகாலைத் தொழுகைக்குத் தயாராகிற அரையிருட்டுப் பொழுதில் மெல்ல ஒலிக்கத் தொடங்கியது அந்தக் குரல்.. ரூஹூ..ரூஹூ..ரூஹூ..
"படைச்சோனே" எனவிளித்து குரல்வந்த திசைநோக்கி ஆண்டவனைக் காவலுக்கு அழைத்துப் பிரார்த்திக்கத் தொடங்குகிற பாத்திமா தாதாவின் தரையமைந்த பாதங்கள் மெல்ல நடுங்கின. சுபுஹூத் தொழநிற்கிற போதும் மனம் நல்லொரு நாளின் அதிகாலையிலேயே ரூஹானிக் கிளியின் குரலழைப்பையே அச்சத்துடன் சுற்றிவந்ததது
ஆறு மகன்களும் மூன்று மகள்களும் மருமகன் மருமகள்களும் அவர்களின் பிள்ளைகளும் நிறைந்து வழிகிற தறவாட்டின் ரத்த சொந்தங்களில் மலேசியாவுக்குக் கட்டிக் கொடுத்திருக்கும் இளையமகளும், மருமகனும் இரட்டைப் பேரன்களுமாய் மைலாஞ்சிக்கே வந்து சேர்வதற்காக விமானம் ஏறுவதற்கு முன்பாக வீடியோ காலில் அழைத்துப் பேசியது ஞாபகம் வந்தது. மூன்று வருடங்களுக்கு முன் கடைசியாகப் பார்த்த பேரன்களின் வளமான வளர்ச்சியில் பேரன்பில்
பாத்துமாத் தாதா நெகிழ்ந்து போயிருந்தாள். மாடியில் பேரக் குழந்தைகள் சித்தப்பா பெரியப்பா மாமாமார்களுடன் கொட்டமடித்துக்
கொண்டிருந்தன. ஆடியோ சிஸ்டத்தை அலறவிட்டு பாட்டும் நடனமுமாய் சப்தங்களாலும் சந்தோஷத்தாலும் நிறைந்து கிடந்தது.தரைத்தளத்தின் கடைசி மூன்று அறைகளிலும்
மாப்பிள்ளைகளும் குழந்தைகளும் டிவி பார்த்தபடி மொபைல் போன்களைப் பார்த்தபடியிருக்க
ஹாலில் இறக்குமதி செய்யப்பட்ட பெரியடிவியில் செய்திச் சேனல் ஓடிக் கொண்டிருந்தது.
கீழே அடுக்களையில் தலையில் தட்டமிட்ட மகள்களும் ,பெண்கொடுத்த
எடுத்த வீடுகளின் உறவுக்காரப் பெண்களும் தாதாவின் மருமகள்களும் எல்லாருக்குமான காலையுணவுக்கான தயாரிப்பில்இருக்க வெளி அடுப்பில் தேநீர் கொதிக்கும் நறுமணம் காற்றில் மிதக்கிறது. மைலாஞ்சி அரைக்கிற பெண் பிள்ளைகள், தேங்காய் துருவுகிற முக்காலியிலமர்ந்து துருவியபடியே மாப்பிள்ளைப் பாட்டொன்றை முணு முணுக்கிற மருமகளையும் பார்த்துப் பூரிக்கிற பாத்தும்மாவின் காதுகளில் தெளிவாகக் கேட்கிறது ரூஹூ.. ரூஹூ வெனும் குரல்.
ரூஹூ...ரூஹூ..ரூஹூ..ரூஹூ..
விதிர்த்துப் போய் உள்ளே பிரார்த்தனை ஓடிற்று.நடுக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் மெல்ல நடந்துபோய்த் தொடியோரமாய் நின்றபடி அடர் மரக் கிளைகளுக்குள்ளிருந்து ரூஹானிப் பறவையின் குரல்வரும் திசையை உற்று நோக்கினாள். எதையோ தீர்மானித்து விட்டவளாய் விருட்டென்று திரும்பி நடந்து வீட்டில் தன் அலமாரியைத் திறந்தாள் ஒருகை நிறைய ரூபாய் நோட்டுகளை எண்ணாமல் அள்ளி ஒரு டவலில் வைத்துக் கட்டியபடியே முணு முணுத்தாள்
“ஆண்டவனே இந்தக் குமருகாரியம் நல்லபடியாக நடத்தித் தரணும். நூறு எத்தீமான பிள்ளைகளுக்குச் சோறு கொடுக்காம்”என்று நேர்ச்சை செய்தபடி அலமாரியைப் பூட்டிச் சாவியை இடுப்பில் சொருகியபடி அடுக்களை நோக்கி நடந்த பாத்துமா தாதாவுக்கு லேசாய் தெம்பு வந்திருந்தது.
வெளி அடுப்பில் இட்லி அவியும் வாசனையும் உள்ளே வேறு சிற்றுண்டிகள் வேகும் சுகந்தமும்
சட்னி தாளிக்கும் கறிவேப்பிலை வறுபடும் மணமுமாய் ஒரு கல்யாண வீட்டின் அத்தனைக் குதூகலங்களும் நிறைந்துகிடக்கிற முன்வெயில் நேரத்தில் ஹாலில் இருந்த டீவியில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது.
மலேசியாவிலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த
மலேசியன் ஏர்லைன்ஸ்**விமானம் ***தீவுக்கு அருகில்**க்கும்** க்கும் இடையே **** கடலின்மீது பறந்து கொண்டிருந்தபோது நடுக்கடலில் மாயமானது. விமானத்தில் பயணித்த 264 பேர்களின் நிலைபற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.இந்திய அரசும் மலேசியஅரசும் தங்கள் விமானப் படை விமானங்களைக் கொண்டு உடனடியாக காணாமல்போன விமானத்தைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளன. காணாமல் போனவிமானத்தில் பயணித்த 264 பயணிகளில் 180பேர் இந்தியர்கள் ன்பது குறிப்பிடத் தக்கது...
செய்தி அறிக்கை நீண்டுகொண்டே போக இதைப்பற்றி எதுவுமே அறியாத, மலேசியாவில் விமானமேறிய தன் கடைசி மகளின் குடும்பத்தையும் பேரப்பிள்ளைகளையும் எதிர்பார்த்து வெளியில் நின்றுகொண்டிருந்த பாத்துமா தாதாவின் காதுகளில் மீண்டும் மிகத் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது அந்த ரூஹானிக் கிளியின் குரல்...
"ரூஹூ...ரூஹூ...ரூஹூ..”
***********
ஜெயாபுதீன்
கோவை.
78069 74077
Comments
Post a Comment