கானக மகள்
மலைவாசிக் குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப்படிக்கும் வேட்டையாடிப் பிழைப்பவனின் ஆறாவது மகளான ஆதிகுடிச் சிறுமியின் கனவில் என்ன இருக்கும்.? வேட்டுவத் தந்தை இருகைககளால் பிழிந்தெடுத்த மலைத்தேனீக்களின் பெருந்தேனடையின் ருசியிருக்குமா.? அம்மையின் கைகளால் திரித்தெடுத்த தினைமாவின் மிருது இருக்குமா.? அந்திமயங்கும் நேரத்தில் வாட்டிய உடும்புக்கறியின் நிணநீர் வாசனையிருக்குமா.? அடர்மழை நாளொன்றில் குடிசைக்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கில் உருகிய மிருகக் கொழுப்பின் நாற்றமிருக்குமா.? கஞ்சாவின் ராஜபோதையில் கிறங்கியபடிப் பாடிக்கொண்டிருந்த பாட்டனின் மழைப்பாடல் ஞாபகம் இருக்குமா.? தேன் வாசனைமோகித்து வளவுக்குள் திரிந்தலைந்த கரடியின் கண்கள் ஒளிர்ந்த நினைவிருக்குமா.? காட்டுப் பன்றியொன்றை இறைச்சிக்காய்த் தகப்பன் தலைவேறு உடல்வேறாய் கரகரவென அறுத்துப்போட்டது நினைவிருக்குமா.? கூப்பிடுதூரத்துச் சிறுகுடிசையொன்றில் தீட்டுப் பெண்களுக்குச் சோறு சுமந்தது கனவில் வருமா.? டீச்சராகிவிடவேண்டுமென்ற வைராக்கியத்தில் குடிநீங்கி காப்பகத்தில் தங்கிப் படிக்கும் கானகமகளை ஜாதிப்பேர் விளித்து முலை தொட்டு உரையாடும் காமுக வார்டனின் கம்பளிப்பூச்சி விரலை அருவருப்புடன் அனுமதித்துக் கொண்டிருக்குமா.?
Comments
Post a Comment